search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறக்காததால்"

    பெரியாறு அணை நீர் மட்டம் 116 அடியை தாண்டிய நிலையிலும் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போகத்துக்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியவுடன் முதல் போக சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி விடுவார்கள்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை மழை பொய்த்ததாலும் தென் மேற்கு பருவ மழை தாமதமாக பெய்ததாலும், பெரியாறு அணையின் நீர் மட்டம் உயரவில்லை. இதனால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் 2-ம் போக சாகுபடிக்கே தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கோடை மழை நன்றாக பெய்து அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும், முன்கூட்டியே தொடங்கி விட்டது. பெரியாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 116.10 அடி தண்ணீர் உள்ளது. நேற்று 260 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 311 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1925 மில்லியன் கன அடியாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் முதல் போக சாகுபடிக்காக நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    அணையில் 112 அடி இருப்பு இருந்தாலே சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்து விடலாம். ஆனால் தற்போது கூடுதலாக நீர் இருந்தும் பருவ மழை தொடங்கிய நிலையிலும் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை.

    இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், 118 அடி நீர் மட்டம் உயர்வுக்காக காத்திருக்கிறோம். அதன் பிறகு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கையை அனுப்பி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    பெரியாறு அணையில் 24.4, தேக்கடி 28, சண்முகா நதி அணை 2, வீரபாண்டி 12, மி.மீ மழை அளவு பதிவானது.

    ×